மாநிலம் முழுவதும் 24 மணி நேரம் தனியார் மருத்துவர்கள் ஸ்டிரைக்: ஐ.எம்.ஏ., மாநில தலைவர் பேட்டி
மாநிலம் முழுவதும் 24 மணி நேரம் 45 ஆயிரம் தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்று ஈரோட்டில் ஐ.எம்.ஏ., மாநில தலைவர் அபுல் ஹசன் பேட்டியளித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 24 மணி நேரம் 45 ஆயிரம் தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்று ஈரோட்டில் ஐ.எம்.ஏ., மாநில தலைவர் அபுல் ஹசன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க (ஐ.எம்.ஏ.) மாநில தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் ஈரோட்டில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இன்று (அதாவது நேற்று) மாலை 6 மணி முதல் நாளை (அதாவது இன்று) மாலை 6 மணி வரை 24 மணி நேரம் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்து 900 தனியார் மருத்துவமனை கள். 28 ஆயிரம் கிளினிக் ஆகியவற்றில் பணியாற்றும் 45 ஆயிரம் டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல இயங்கும். புறநோயாளிகள் பிரிவு செயல்படாது. அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்பட மாட்டாது. பிற பிரிவுகளும் செயல்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் மாநில தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து ஈரோட்டில் நேற்று மருத்துவர்கள் உடனடியாக வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு வந்திருந்த நோயாளிகள் சிரமப்பட்டனர்.