ஈரோடு: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து கடம்பூர் மலைப்பகுதி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட இந்த மலைப்பகுதியானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதி 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் கடம்பூர் மலைப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில் , பெங்களூருவிலிருந்து வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உகினியம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் அவசர அவரமாகத் தரையிறக்கப்பட்டது. இதில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 4 பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர்.
இதைக்கண்டதும் மலைவாழ் மக்கள் ஆச்சரியத்துடன் ஹெலிகாப்படரை வேடிக்கை பார்க்க தொடங்கினர். பலர் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனைத் தொடர்ந்து வானிலை சரியான நிலையில் மீண்டும் ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. திடீரென மோசமான வானிலை காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் இறங்கிய ஹெலிகாப்டர் கண்டு அப்பகுதி பொதுமக்கள் கூடியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.