சிப்காட், அத்திக்கடவு-அவிநாசி, சோலார், சத்தி பேருந்து நிலையம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம்
ஈரோட்டில் சிப்காட், அத்திக்கடவு அவிநாசி திட்டம், சோலார் மற்றும் சத்தி பேருந்து நிலையம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று (6ம் தேதி) நடைபெற்றது.;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், சிப்காட், அத்திக்கடவு-அவிநாசி திட்டம், சோலார் மற்றும் சத்தி பேருந்து நிலையம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறை, சிப்காட், அத்திக்கடவு-அவிநாசி திட்டம், சோலார் பேருந்து நிலையம் மற்றும் சத்தி பேருந்து நிலையம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும், தண்ணீர் தடையின்றி செல்வதற்கும், அனைத்து குளங்களையும் நிரப்புவதற்கும் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, கருத்துகள் கேட்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தினை திறந்து வைத்தது முதல் இன்று வரை 21 நாட்களில், 10 நாள் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக உள்ள 1045 குளங்களில் 746 குளங்களுக்கு தண்ணீர் சேர்ந்துள்ளது. தண்ணீர் வர வர மற்ற குளங்களுக்கும் போய் சேருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள 299 குளங்களுக்கும் தண்ணீர் நிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களிலே அந்த தண்ணீர் கசிவு இருக்கிறது. தண்ணீர் கசிவு சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தண்ணீர் 70 நாள் கொடுக்க வேண்டும் என்று திட்டம் இருக்கிறது. அந்த 70 நாள் கொடுக்கிற பொழுது இந்த 1045 குளங்களும் நிரப்பப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
எனவே, அதை கொடுத்து விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எல்.பி.பி. வாய்க்காலில் தண்ணீர் விடப்பட்டுள்ள காரணத்தால், அதனுடைய உபரிநீர் மற்றும் அதனோடு மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் கிடைக்கின்ற பொழுது முழுமையாக அதை நாம் பயன்படுத்த முடியும்.
தொடர்ந்து, சாய கழிவுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எந்த காரணத்தை கொண்டும் சாயக்கழிவு நீரினை சுத்திகரிக்காமல் திறந்து விடக்கூடாது. அவ்வாறு விட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மூலம் புகார் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கும் அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்க நிர்வாகிகளும் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் தற்காலிகமாவும், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நிரந்தரமான தீர்வு குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், சிப்காட் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் புதிதாக அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, கிடைக்கப்பெற்றவுடன் விரைவில் பணிகள் துவங்கப்படவுள்ளது. இப்பணிகள் நிறைவடையும் பொழுது சாயக்கழிவு தொடர்பாக முழுமையான தீர்வு கிடைக்கப்பெறும்.
சோலார் பேருந்து நிலையம் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதேபோல், சத்தியமங்கலத்திலும் ஒரு பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி), ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வி.பிரேமலதா (நிலம்), வருவாய் கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார் (ஈரோடு), கண்ணப்பன் (கோபிசெட்டிபாளையம்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், சாய, சலவை பட்டறை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.