கோபி அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை: டாக்டர் மீது வழக்கு
கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, முதன்மை குடிமை மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். பணியில் இருந்த அந்த பெண்ணிடம் அங்கு வந்த, முதன்மை குடிமை மருத்துவர் ஆனந்தன் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுகுறித்து கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பெண் ஊழியர் அளித்த புகாரின்பேரில், கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் மருத்துவர் ஆனந்தன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவர் ஆனந்தனை விசாரிக்க, 6 பேர் கொண்ட விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் மூலம், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இச்சம்பவம், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.