மதுரையில் இருந்து ரகசியமாக செங்கோட்டையன் ‘திடீர்’ டெல்லி பயணம்: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல்

மதுரையில் இருந்து ரகசியமாக செங்கோட்டையன் டெல்லி சென்றார். அங்கு, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2025-03-29 11:40 GMT

மேல் படம்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது (படம் பழைய படம்). கீழ் படம் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மதுரையில் இருந்து டெல்லி சென்றதற்கான விமான டிக்கெட்.

மதுரையில் இருந்து ரகசியமாக செங்கோட்டையன் டெல்லி சென்றார். அங்கு, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு ரகசியமாக சென்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தனது இந்த பயணம் வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்க அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இன்று காலை செங்கோட்டையன் விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரைக்கு திரும்பினார். பின்னர் அவர் காரில் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்துக்கு சென்றார்.  அவரது இந்த ரகசிய டெல்லி பயணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.

இதையடுத்து அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது பற்றி செங்கோட்டையனிடம் கருத்து கேட்பதற்காக அவரை டெல்லிக்கு அழைத்தாக கூறப்படுகிறது. அதன் பேரிலே, அவர் டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது அது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என தெரிவித்தனர்.  எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் செங்கோட்டையன் டெல்லி சென்றது குறித்து அதிமுகவினர் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.

Similar News