அனுமதியின்றி விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு பறிமுதல்
ஈரோடு அருகே அனுமதி இன்றி தீபாவளி விற்பனைக்காக வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மக்கள் பட்டாசு வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பட்டாசுகளை ஒரு மாதத்திற்கு முன்னரே அனுமதி பெற்று விதிமுறைகளை பின்பற்றி அரசு நிர்ணயம் செய்து உள்ள விலைக்கு விற்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஒரு சிலர் பட்டாசுகளை அதிக அளவில் வாங்கி அதை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ரவுண்டானா அருகே உள்ள கொங்கு நகரில் ஒரு வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொங்கு நகரில் உள்ள வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பரமசிவம் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சிவகாசியிலிருந்து பட்டாசுகளை உரிய அனுமதி இன்றி வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து பரமசிவத்தை கைது செய்த அரச்சலூர் காவல்துறையினர் அவரிடம் இருந்து 40 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பொது மக்கள் எவரேனும் பட்டாசுகளை அனுமதி இன்றி விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.