ஈரோடு அருகே பார் ஊழியருக்கு கத்திக்குத்து
ஈரோடு அருகே பார் ஊழியரை கத்தியால் குத்து விட்டு தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.;
ஈரோடு-சென்னிமலை சாலையில், காசிபாளையம் அரசு ஐடிஐ-க்கு எதிரே டாஸ்மாக் கடை (எண்:3536) பாருடன் செயல்படுகிறது. சிவகங்கை மாவட்டம் கோட்டையை சேர்ந்த பூபாலன், அபிமன்யு, வீரசேகர், பிரவீண் உள்ளிட்டோர் பாரில் வேலை செய்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, கடையை மூடியபின் சக ஊழியர்களுடன் பூபாலன், பாரில் வரவு-செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது வந்த ஈரோடு கே.கே.நகரை சேர்ந்த சங்கர், கார்த்தி, சூர்யா உள்பட நான்கு பேர் மது கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, பாரில் விற்பனை செய்வதில்லை என பூபாலன் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த நால்வரும், தகாத வார்த்தை பேசி பூபாலனை தள்ளி விட்டுள்ளனர். சங்கர் என்பவர் கத்தியால் பூபாலனின் தலை, இடது காது, தோள் பட்டையில் குத்தியுள்ளார். பூபாலன் கூச்சல் போட்டதால், நால்வரும் தப்பி ஓடினர். ஈரோடு அரசு மருத்துவமனையில், பூபாலன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.