சத்தியமங்கலம் நவ பாரத் ரேங்க் பள்ளி ஆண்டு விழா: திரைப்பட இயக்குநர் பங்கேற்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நவ பாரத் ரேங்க் பள்ளி ஆண்டு விழாவில் திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் பங்கேற்றார்.
சத்தியமங்கலம் நவ பாரத் ரேங்க் பள்ளி ஆண்டு விழாவில் திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் பங்கேற்றார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோபி சாலையில் அரியப்பம்பாளையத்தில் உள்ள நவ பாரத் ரேங்க் பள்ளியின் 16வது ஆண்டு விழா நேற்று (டிச.28) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கலந்து கொண்டு பல்வேறு தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, படித்த பள்ளிக்கும், படிப்பு சொல்லி கொடுத்த ஆசிரியர்களுக்கும் பெயர் வாங்கிக் கொடுப்பது என்பது ரொம்பவும் முக்கியம். என்னுடைய படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு சண்முகமணி என பெயர் வைத்திருப்பேன்.
சாதாரணமாக நான் அந்த பெயரை வைக்கவில்லை. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் பெயர் சண்முகமணி. அவரின் ஞாபகார்த்தமாக படத்தில் அவரது பெயரை சண்முகமணி என நான் வைத்துக் கொண்டேன். நான் 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் போது கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை ஆசிரியர் சண்முகமணி கற்றுக் கொடுத்தார்.
இன்றும் நான் அவருடன் தொடர்பில் உள்ளேன். அவரது பிள்ளைகள் எனக்கு போன் செய்து ஆசிரியருக்கு திருமண நாள் கொண்டாடுகிறோம் என கூறினார்கள். நான் உடனே எனது ஆசிரியருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை செல்போனில் வீடியோவாக பேசி அனுப்பி வைத்தேன்.
அவர்களை வாழ்த்தும் போது அவர்களின் குடும்பத்தாருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் நமது வாழ்வில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அதனால் கடைசி வரைக்கும் நாம் அந்த ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது ரொம்பவும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் ரவி கிருஷ்ணா ஆண்டு அறிக்கை வாசித்தார். பள்ளி தாளாளர்கள் அனைவரையும் வரவேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் கண்கவர் நடனம் நடைபெற்றது. விழாவில் முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.