கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சசிமோகன் பொறுப்பேற்பு

கோவை சரகத்தின் 33வது புதிய டி.ஐ.ஜி.யாக சசிமோகன் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்டார்.;

Update: 2025-01-02 02:00 GMT

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள டிஐஜி அலுவலகத்தில் கோவை சரக டிஐஜியாக சசிமோகன் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்ட போது எடுத்த படம்.

கோவை சரகத்தின் 33வது புதிய டி.ஐ.ஜி.,யாக சசிமோகன் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார்  உத்தரவிட்டார்.

அதன்படி, கோவை சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த ஏ.சரவணசுந்தர் கோவை மாநகர காவல் ஆணையராக பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக பணியாற்றி வந்த  சசிமோகன் பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து 33வது கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட சசிமோகன் நேற்று ரேஸ்கோர்சில் உள்ள கோவை சரக அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனது இருக்கைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கோவை புறநகர் எல்லைகளில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க ரோந்து பணி அதிகரிக்கப்படும். மேலும் விழிப்புணர்வு நடத்தி போதை பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோர்ட்டில் நிலுவை வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும், குற்ற வழக்குகளை துரிதப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கோவை சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News