ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன

Update: 2022-01-09 05:45 GMT

ஈரோடு நகரில் முழு முடக்கம் காரணமாக வெறிச்சோடிக்கிடக்கும் சாலை

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இயல்பு நிலை திரும்பியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது.இந்நிலையில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்தும் வருகிறது. தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.இதையடுத்து தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் பிறப்பித்து உத்தரவிட்டது. அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது. 


 ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாநகரில் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காளைமாடு சிலை, கருங்கல் பாளையம், ஸ்வஸ்திக் கார்னர், மேட்டூர் ரோடு, கே.வி.என்.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி போன்ற அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.


மாவட்டத்தில் ஜவுளி நிறுவனங்கள் வணிக வளாகங்கள், ஈரோடு வ.உ.சி.பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த நேதாஜி பெரிய மார்க்கெட், உழவர் சந்தை, இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன.ஈரோடு சம்பத்நகர், பெரியார் நகர், குமலன் குட்டை மற்றும் பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதியில் செயல்படும் உழவர் சந்தை இன்று மூடப்பட்டிருந்தன.இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 210 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பால் கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் இன்று வழக்கம் போல் செயல்பட்டன. 


 கோபிச்செட்டிப்பாளையம்:- கோபி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. கோபி, மொடச்சூர் ரோடு, சிறுவலூர், திங்களூர், வரப்பாளையம், நம்பியூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

சத்தியமங்கலம்:-சத்தியமங்கலம், பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. தினசரி மார்க்கெட், பூ மார்க்கெட், வாரசந்தை, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. சத்தியமங்கலம், பவானி சாகர், புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையங்கள் வெறிச்சோடியது.

அந்தியூர்:- அந்தியூர் பஸ் நிலையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அந்தியூர் மாட்டுச் சந்தையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.இதேபோல் டி.என்.பாளையம். அம்மாபேட்டை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

பெருந்துறை:- பெருந்துறை பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக வாரசந்தை, தினசரி மார்க்கெட் மற்றும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது. பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது. இதேபோல் பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி, சென்னிமலை, மொடக் குறிச்சி, சிவகிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

கொடுமுடி:-  கொடுமுடி மற்றும் அருகில் உள்ள சாலைப் புதூர், தாமரைப்பாளையம், க.ஒத்தக்கடை, ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம், கருமாண் டாம்பாளையம், சோளங்கா பாளையம், பாசூர், ஆகிய முக்கியமான இடங்களில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்டி கடைகள், டீ கடைகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

அனைத்துப் பகுதிகளிலும் நெடுஞ்சாலை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் காலையில் 6 மணி முதல் 7.30 மணி வரை பால் கூட்டுறவு சங்கங்கள் மட்டும் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்தனர்.மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கில் வாகனங்களில் சுற்றிய பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

Tags:    

Similar News