புஞ்சை புளியம்பட்டி அருகே புதிய கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2023-08-26 14:07 GMT

புதியதாக கல்குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது என காராப்பட்டி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி ஊராட்சி க்கு உட்பட்ட சின்னான்குட்டை குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய விளை நிலங்களின் அருகே கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்குவாரியில் அதிக சக்தி வாய்ந்த வெடிகளை பயன்படுத்தி பாறைகளை உடைத்து எடுப்பதால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாய தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் மிகுந்த சிரம த்திற்கு ஆளாகி வருகின்ற னர்.

வெடிச்சத்தம் கேட்கும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் அதிக சத்தம் காரணமாக கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழத்திற்கு பாறைகளை வெடி வைத்து எடுப்பதால் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கற்களை அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் அப்பகுதியில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.

கல்குவாரிக்கு செல்லும் சாலையில் 4 இடங்களில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக பாலம் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே உள்ள கல்குவாரிக்கு அருகே புதிய கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இது சம்பந்தமாக காராப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் வட்டார தலைவர் சுப்பு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் காரப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாரம்பாளையம், மாரம்பாளையம் புதூர், வகுத்து கவுண்டன்புதூர், நடுப்பாளையம், கொமரபாளையம், தேவம்பாளையம், சின்னான்குட்டை கோப்பம்பாளையம், கண்டி சாலை, காரப்பாடி, கோட்டபாளையம், பாறைப்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் மற்றும் விவசாயக் கூலிகள் வசித்து வருகிறார்கள்

எங்களது பகுதியில் ஏற்கனவே ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நிலையில் மீண்டும் ஒரு கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்குவதாக கூறப்படுகிறது.

எனவே மீண்டும் இப்பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து விவசாயிகளின் நலன் கருதி அனுமதி வழங்கக் கூடாது என அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் காரப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமசாமி, விவசாய சங்க நிர்வாகிகள், வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்ட னர்.

Tags:    

Similar News