அந்தியூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
அந்தியூர் அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம், விராலி காட்டுப்புதூர் போன்ற கிராமங்கள் பர்கூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு நூற்றக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பெரும்பாலும் விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று விராலி காட்டுப்புதூர் கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக இரவு நேரத்தில் உலா வந்தது. சிறுத்தை நடமாட்டம் அங்கு ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது.
சிறிது நேரம் கிராமத்துக்குள் உலா வந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இன்று காலை சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்த்த அந்த வீட்டுக்காரர் இது குறித்து அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்தியூர் வனத்துறையினர் அந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சிறுத்தை வந்து சென்றது உறுதியானது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இரவு நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம் எனவும், கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தை கிராமத்துக்குள் உலா வரும் சிசிடிவி கேமரா காட்சி தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.