ஈரோடு: வடகிழக்கு பருவமழையையொட்டி தயார் நிலையில் மீட்புக்குழுவினர்
வடகிழக்கு பருவமழையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் தயார் நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, கோபி, தாளவாடி மலைப்பகுதி, வரட்டுப்பள்ளம் குண்டேரிப்பள்ளம் போன்ற அணை பகுதிகளில், பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளம், குட்டை, ஏரிகள் நிரம்பி வருகின்றன. பவானிசாகர் அணையும் 104 அடியை நெருங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக மழை பெய்தால் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க, மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் இளநிலை பொறியாளர், ஆய்வாளர், 10 சுகாதார தூய்மை பணியாளர்கள் ஒரு ஜேசிபி எந்திரம், சாக்கடை அள்ளும் வண்டி, ஒரு லாரி என, 4 மண்டலங்களிலும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரை பொருத்தவரை காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை பெய்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் பெரும்பள்ளம் ஓடை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் செல்லவும், அருகிலுள்ள பள்ளிகளில் அவர்களை தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாநகர் பகுதியில், மழை காலத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களை, மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மழை பெரிய அளவில் பெய்தாலும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், ஈரோடு மாவட்டம் முழுவதும் 150 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுவார்கள். இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுக்காண்டி கூறுகையில், மாவட்டம் முழுவதும் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் 150 கைதேர்ந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் எத்தகைய சூழ்நிலையும் சமாளிக்கும் திறன் உடையவர்கள். 6 ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கயிறுகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நவீன எந்திரங்கள் என அனைத்து வகையான எந்திரங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. நமது மாவட்டத்தை பொறுத்தவரை சத்தியமங்கலம், பவானி, அத்தாணி, கொடுமுடி.ஊஞ்சலூர், மொடக்குறிச்சி உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் மட்டுமே அதிக அளவு பாதிப்பு இருக்கும். வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்தாலும், அதை நாம் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கிறோம் என்றார்.