பவானிசாகர் அருகே புதரில் சிக்கித் தவித்த கரடி மீட்பு
பவானிசாகர் அருகே வேலி கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனத்தில் விட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசிக்கின்றன. இந்நிலையில் பவானிசாகர் வனச்சரகம் புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி அப்பகுதியிலுள்ள தனியார் காகித ஆலை அருகே சுற்றித் திரிந்துள்ளது. அப்போது அங்குள்ள ஒரு முட்புதரில் இருந்த கம்பியில் சிக்கிக்கொண்டது. இதனால் அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது. ஆடு, மேடு மேய்த்தவர்கள் அதைப் பார்த்து உடனே பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் தலைமையில் பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் புதரில் சிக்கித் தவித்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தினார்.இதைத்தொடர்ந்து வனத் துறை ஊழியர்கள் புதரில் சிக்கிய கரடியை மீட்டு வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.