உக்ரைனில் சிக்கியுள்ள கோபிசெட்டிபாளையம் மாணவரை மீட்க கோரிக்கை
உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ள கோபிசெட்டிபாளையம் மாணவரை மீட்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து வருகின்றனர்.அதில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் - ராஜாமணி தம்பதியரின் மகன் ரகுபதி். உக்ரைனில் கார்கிவ் நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஒன்றில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகிறார்.ஒரு தேர்வு மட்டுமே எழுத வேண்டிய நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக தேர்வு எழுத முடியாத நிலையில், பதுங்கு குழிகளிலும், மெட்ரோ ரயில் சுரங்க பாதையிலும் பதுங்கி இருந்துள்ளனர்.
தொடர்ந்து 6 நாட்களுக்கு பிறகு இன்று கார்கிவ் நகரில் இருந்து ரயில் மூலமாக வெளியேற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதைத்தொடர்ந்து இன்று மாணவர் ரகு உட்பட பலரும் கார்கிவ் நகரில் இருந்து ரயில் மூலமாக வெளியேறி வருகின்றனர். போர் சூழ்நிலைக்கேற்ப அங்கேரி அல்லது போலந்து நாடு வழியாக தமிழகம் திரும்ப உள்ளதாக மாணவர் ரகுபதி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ரகுபதி உள்ளிட்ட மாணவர்களை உடனடியாக மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.