அந்தியூர் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்
அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பேரூராட்சி பகுதியில் உள்ள சுவர்களில் எழுதப்பட்ட, அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்க வேண்டும் எனவும், பிளக்ஸ் பேனர்களையும், கொடிக் கம்பங்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் எனவும் பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து அந்தியூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கொடிக் கம்பங்களை, அந்தந்த, அரசியல் கட்சியினர் அகற்றி கொண்டனர். ஆனால், ஒரு சில அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்ததால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இன்று பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று ஆப்பக்கூடல், அத்தாணி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.