பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.;

Update: 2022-08-12 04:15 GMT

அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் சீறிப்பாய்ந்த நீரில் மலர்கள் தூவி வரவேற்றனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில்,  நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக, கடந்த 5ஆம் தேதி காலை 9 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது.

இதையடுத்து பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 102 அடி ஆக இருந்து வருகிறது. இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பிரதான கால்வாய் இரட்டைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் கால்வாய் ஒற்றைப்படை மதகுகளுக்கும் பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது அணையில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீரில் அமைச்சர், விவசாயிகள், பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். 

இந்தத் தண்ணீர் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி வரை சுழற்சி முறையில் 120 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக நீரின் அளவு உயர்த்தப்படும்.

இந்த தண்ணீரை சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News