வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கூலி தொழிலாளி பிணமாக மீட்பு
அந்தியூர் அருகே வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கூலி தொழிலாளி இன்று காலை தவிட்டுப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் பிணமாக மீட்கப்பட்டார்;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 43). மது பழக்கத்திற்கு அடிமையானதால், கடந்த மூன்று வருடங்களாக வலிப்பு நோய் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வேலைக்கு சென்று வருவதாக, கூறிவிட்டு சென்ற காமராஜ், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து காமராஜ் வீட்டிற்கு வராததால், அவரது மகன் ஜீவானந்தம், பல இடங்களில் தேடியும் எந்த பலனும் இல்லை.
இதனையடுத்து, இன்று காலை அந்தியூர் தவிட்டுப்பாளையம் பழைய பெட்ரோல் பங்க் அருகில் காமராஜ் மயங்கிய நிலையில் கிடப்பதாக, ஜீவானந்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற ஜீவானந்தம் மற்றும் உறவினர்கள் காமராஜை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காமராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஜீவானந்தம் அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.