சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை மறுபூஜை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை (ஏப்ரல் 14) மறுபூஜை திருவிழா நடக்கிறது.;

Update: 2025-04-13 02:20 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை (ஏப்ரல் 14) மறுபூஜை திருவிழா நடக்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் அமாவாசை, பவுர்ணமி, பண்டிகை நாட்களிலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பரம் வீதி உலா, கம்பம் சாட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 8ம் தேதி முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையடுத்து, நாளை (திங்கட்கிழமை) மறுபூஜை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள்.

இதற்காக கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை மாலையில் நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.

Similar News