நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து 1,362 கன அடியாக அதிகரித்துள்ளது .
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து 1,362 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் 44 அடியாக சரிந்தது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணையை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று (மே.21) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,306 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.22) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,362 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 45.69 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 46.19 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், நீர் இருப்பு 3.58 டிஎம்சியாக உள்ளது.