அந்தியூர் அருகே சிறார்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் குண்டம் திருவிழா

அந்தியூர் அருகே புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் சிறுவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update: 2022-05-19 09:15 GMT

குண்டம் திருவிழாவில்  ஒரு சிறுவன் தீமித்தான்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம், புதுமாரியம்மன் கோயிலில் சிறார்கள் மட்டுமே இறங்கும் குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது.சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இத்திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட சிறார்கள் குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இக்கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று நடைபெற்றது. முன்னதாக, கோயில் முன்பாக 25 அடி நீளத்துக்கு குண்டம் அமைக்கப்பட்டு, விறகுகள் அடுக்கி தீ மூட்டப்பட்டது. தீப்பிழம்புகள் தட்டி சமன் செய்யப்பட்ட பின்னர், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இவ்விழாவில் குண்டம் இறங்கும் 5 முதல் 12 வயதுள்ள சிறார்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்கி இரு நாட்களாக விரதம் இருந்தனர். இவர்களுக்கு, சந்தனம், திருநீர் பூசப்பட்டு, பிரம்பில் பூச்சூடி கைகளில் வழங்கப்பட்டது. தொடர்ந்து, குண்டத்தில் இறங்கிய சிறார்களை, குண்டத்தைச் சுற்றிலும் திரண்டிருந்த பக்தர்கள் கைகளைத் தட்டியும், கோஷங்கள் எழுப்பியும் உற்சாக மூட்டினர்.

Tags:    

Similar News