சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டா இருந்தும், இடம் அளவீடு செய்து கொடுக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-11-26 11:30 GMT

சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டா இருந்தும், இடம் அளவீடு செய்து கொடுக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் சிக்கரசம்பாளையம் கிராமம் பீக்கிரிபாளையத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோருக்கு 2013ம் வருடம் இலவச வீட்டு மனை பட்டா கொடுக்கப்பட்டது. ஆனால் 11 வருடங்கள் ஆகியும் நிலத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை.

இதுகுறித்து கடந்த வருடம் மனு கொடுத்தும் பலனில்லாததால் 25க்கும் மேற்பட்டோர், இன்று (நவ.26) மதியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதில் 18 குடும்பத்தினருக்கு குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை எனக் 20க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த தலைமை நில அளவையாளர் ரவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நவ.30ம் தேதி சனிக்கிழமை நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அரை மணி நேர போராட்டத்தை கலைந்து சென்றனர்.

Similar News