அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே பாரதி நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு காவிரி ஆறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சரியாக வருவதில்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்குவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இங்குள்ளவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், இந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று வெள்ளித்திருப்பூர்- கொளத்தூர் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் வெள்ளித்திருப்பூர்-கொளத்தூர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.