ஏளூர் பகுதியில் கரும்பு லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஏளூர் பகுதியில் வயர்களில் உரசி மின்சாரம் துண்டிப்புக்கு காரணமான கரும்பு லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.;
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூரில், சென்றபோது சத்தி-அத்தாணி நெடுஞ்சாலையின் குறுக்கே தொங்கிய மின்சார வயரில் கரும்பு ஏற்றி வந்த லாரி உரசியதால் தீப்பொறி பறந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது.
இதனையடுத்து வீடுகளுக்கும் மின்வினியோகம் தடைப்பட்டது. இதையறிந்து அங்குதிரண்ட அப்பகுதி பொதுமக்கள் 2 கரும்பு லாரிகளை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயரமாக அடுக்கப்பட்ட கரும்பு லாரிகள் வரும்போது அதில் உரசி தீப்பொறி பறக்கிறது என்றனர்.
இதையடுத்து போலீசார் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் லாரிகளை விடுவித்தனர். இதற்கிடையே மின்வாரிய அதிகாரிகள் லாரியில் உரசிய மின்சார ஒயர்களை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.