கவுந்தப்பாடி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தொழிலாளியை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறி, கவுந்தப்பாடிபுதூர் அரசு பள்ளி முன்பு, பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன். இவர், நேற்று காலை வேலைக்கு சைக்கிளில் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தனது அக்கா மாரியம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதனால் மாரியம்மாள், தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு ஆவேசமடைந்த உறவினர்கள், கவுந்தப்பாடி-ஆப்பக்கூடல் சாலையில், கவுந்தப்பாடிபுதூர் அரசு பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். முருகேசனை போலீசார் அழைத்துச் செல்லவில்லை என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் கவுந்தப்பாடி-ஆப்பக்கூடல் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.