ஒலகடத்தில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
ஒலகடம் பேரூராட்சியில் தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலகடம் பேரூராட்சி, 1-வது வார்டு குட்டைமேடு பகுதியில் 400-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பவானி - அந்தியூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த வெள்ளிதிருப்பூர் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் தண்ணீருக்காக நீண்ட தூரம் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் பிரச்னையைத் தீர்க்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, ஒலகடம் பேரூராட்சித் தலைவர் வேலுச்சாமி, செயல் அலுவலர் சுதாராணி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு நடத்தியதோடு, குடிநீர் விநியோகத்தை சீராக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால், சமாதானமடைந்த பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.