ஈரோடு மாவட்டத்தில் வரும் 8ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் 8ம் தேதி (சனிக்கிழமை) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் 8ம் தேதி (சனிக்கிழமை) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (6ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் மார்ச் 8ம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசிஎண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.
அதன்படி, ஈரோடு வட்டத்தில் கனிராவுத்தர் பெரியசேமூர் ரேஷன் கடையிலும், பெருந்துறை வட்டத்தில் கவுண்டிச்சிபாளையம் ரேஷன் கடையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் நாதகவுண்டன்பாளையம் கஸ்பாபேட்டை ரேஷன் கடையிலும் நடக்க உள்ளது.
அதேபோல், கொடுமுடி வட்டத்தில் கணபதிபாளையம் கொடுமுடி (அ) ரேஷன் கடையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் சவுண்டப்பூர் ரேஷன் கடையிலும், நம்பியூர் வட்டத்தில் காரப்பாடி ரேஷன் கடையிலும் நடைபெற உள்ளது.
மேலும், பவானி வட்டத்தில் கவுந்தப்பாடி-2, கவுந்தப்பாடி (அ) ரேஷன் கடையிலும், அந்தியூர் வட்டத்தில் சுந்தராம்பாளையம் படவல்கால்வாய் ரேஷன் கடையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் இண்டியம்பாளையம் மாக்கினாங்கோம்பை ரேஷன் கடையிலும், தாளவாடி வட்டத்தில் கல்மண்டிபுரம் திகினாரை ரேஷன் கடையிலும் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.