அத்தாணி அருகே சத்துணவு அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
அத்தாணி அருகே, உணவுப் பொருட்களை விற்ற இரண்டு சத்துணவு அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புதிய தமிழகம் கட்சி சார்பில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;
அந்தியூர் வட்டாட்சியரிடம் மனு வழங்கிய போது எடுத்த படம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று மாலை வட்டாட்சியர் விஜயகுமாரிடம் புதிய தமிழகம் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஐ.மன்னன் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த சனிக்கிழமை அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட குப்பாண்டபாளையம் ஊராட்சி, அத்தாணி கைகாட்டி பவானி பிரிவில் விஜயலட்சுமி என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் ஜெகதீஷ் என்பவரிடம், மூங்கில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் முருகேஷ் மற்றும் அத்தாணி ஆற்றுப்பாலம் துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பங்கஜம் ஆகியோர் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்துள்ளனர்
தகவல் அறிந்த ஆப்பக்கூடல் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதுவரை சத்துணவு அமைப்பாளர்களான முருகேஷ் மற்றும் பங்கஜம் ஆகியோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மாணவர்களின் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை திருடி விற்பனை செய்த இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது அந்தியூர் ஒன்றிய செயலாளர் குமார், கோபி ஒன்றிய செயலாளர் செல்லப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.