பவானி அருகே தனியார் பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து
பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்தினை பவானி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் பள்ளி குழந்தைகளை ஏற்றி வருவதற்காக சித்தோடு நோக்கி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இருந்து சேலம் நோக்கி ஆயில் பாரம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பள்ளி பேருந்து ஓட்டுனர் தமிழ்வாணன் மற்றும் லாரி ஓட்டுநர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் என்பவரும் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அங்கே இருந்தவர்கள் இரண்டு ஓட்டுனரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை செய்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தகவலறிந்து சித்தோடு போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர். விபத்துக்குள்ளானது வாகனத்தை அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக பள்ளி குழந்தைகள் யாரும் பேருந்தில் இல்லாததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இவ்வாறு காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் வாகனங்களை முறையாக இயக்க ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்க போக்குவரத்து போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.