பெருந்துறை அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.;

Update: 2025-05-08 05:40 GMT

கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஓலப்பாளையம் பிரிவு அருகே இன்று (மே.8) அதிகாலை 2.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது .

இந்த நிலையில், பேருந்தின் குறுக்கே 4 சக்கர வாகனம் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பேருந்தை ஓட்டுநர் திருப்பிய போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த 13 பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து, உடனடியாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவல் இருந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News