ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி

ஈரோட்டில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது

Update: 2024-05-24 15:00 GMT

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான முதற்கட்ட பயிற்சியின் போது எடுத்த படம்.

ஈரோட்டில் உள்ள மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியில் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் சீலிடப்பட்ட அறையில் வைக்கப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிப்பட்டு வருகிறது.

மேலும், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் 4ம் தேதி சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியில் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (மே.24) வெள்ளிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தலைமையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தெரிவித்ததாவது:  ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேசைகள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 84 மேசைகளில் 17 முதல் 22 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. இதற்காக 84 கண்காணிப்பாளர்கள், 84 உதவியாளர்கள், 84 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 சதவீதம் கூடுதலாக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் ரிசர்வில் வைக்கப்படுவார்கள்.

மேலும் தபால் வாக்குகள் 9 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் 4ம் தேதி காலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் 4ம் தேதி காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களில் ஆஜராக வேண்டும்.

வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் (சுற்றுவாரியாக) வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தபால் வாக்கு எண்ணிக்கைக்கான மேஜை உட்பட ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ரகுநாதன் (தேர்தல்), செல்வராஜ் (வளர்ச்சி), தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர், உதவி திட்ட அலுவலர் (வளர்ச்சி) மகேஸ்வரி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News