அந்தியூர் அருகே மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்தடை
அந்தியூர் அருகே மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு 33 கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று மாலை மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.இந்த நிலையில், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பகுதியில் நேற்று மாலை மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு பலத்த காற்று வீசியது. இதனால் ரோட்டில் புழுதி காற்று வீசியது. தொடர்ந்து சாரல் மழை தூறி கொண்டே இருந்தது.
மேலும் பலத்த காற்று வீசியதால் மலை பர்கூர் அடிவாரம் வரட்டுப்பள்ளம் பிரிவு பகுதியில் மரக்கிளைகள் உடைந்தது. ஒரு சில மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் அந்த பகுதியில் மின் வயர்கள் மீது மரக்கிளைகள் விழுந்தது. இதனால் மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டது.இதனால் பர்கூர், தட்டக்கரை, தாமரைக்கரை, ஓசூர், ஒத்தனம், தேவர்மலை, மடம் உள்பட 33 கிராம பகுதிகளில் இரவு 8 மணிக்கு மின் தடை ஏற்பட்டது.
இதனால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கியது. மேலும் மின் தடையால் கிராம மக்கள் விடிய விடிய கடும் அவதி அடைந்தனர். இது குறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை வரை மின் வினியோகம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.