கீழ்வாணி அருகே சாலை விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கீழ்வாணி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.;

Update: 2022-05-03 11:30 GMT
கீழ்வாணி அருகே சாலை விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விமல் ராஜ்.

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் அத்தாணி பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் விமல்ராஜ் (வயது 17). இவர், கோபியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், விமல்ராஜ் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, கீழ்வாணி ஆஞ்சநேயர் கோவில் பிரிவிக்கும் செங்காட்டு புதூர் பிரிவிற்கு இடையே உள்ள வளைவில் வந்தபோது, எதிரே மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு சிறு காயம் ஏற்பட்டது. விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த விமல்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, விமல்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக விமல்ராஜின் உடலானது அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News