ஈரோட்டில் சாலையில் கிடந்த நகையை போலீசிடம் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

ஈரோட்டில் சாலையில் கிடந்த நகையை போலீசிடம் ஒப்படைத்த தொழிலாளியை போலீசார் பாராட்டினர்.;

Update: 2025-03-13 10:10 GMT

ஈரோட்டில் சாலையில் கிடந்த நகையை போலீசிடம் ஒப்படைத்த தொழிலாளியை போலீசார் பாராட்டினர்.

ஈரோடு வைராபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் வைராபாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது ரோட்டோரத்தில் கைப்பை ஒன்று கிடந்தது.

அதை எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தன. இதைத்தொடர்ந்து அவர் அந்த கைப்பையை கருங்கல்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருடைய மனைவி பிரபா (29) போலீஸ் நிலையம் வந்தார்.

அப்போது அவர், தன்னுடைய கைப்பை தொலைந்து விட்டதாகவும், அதை கண்டுபிடித்து கொடுக்கும்படியும் கூறினார். இதைத்தொடர்ந்து போலீ சார் நடந்ததை கூறி நீங்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து பை குறித்த அடையாளத்தை தெரிவித்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால், பிரபாவும், செல்வமும் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் பிரபாவை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் அழைத்து பையில் வைத்திருக்கும் நகையை சரிபார்க்குமாறு தெரிவித்தார். அதன்பேரில் அவர் பையை திறந்து பார்த்து, தான் வைத்திருந்த 1¼ பவுன் நகை சரியாக இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அந்த பையை பிரபாவிடம் கொடுத்தார். மேலும் கீழே கிடந்த நகையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த செல்வத்தின் நேர்மையை பாராட்டி அவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சால்வை அணி வித்து பாராட்டினார்.

Similar News