ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டு வந்த மினி டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது!
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஆப்பக்கூடல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி மல்லியூர் பகுதியில் ஆப்பக்கூடல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு, காவலர்கள் சரவணன், அருள் ஆகியோர் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மல்லியூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் மல்லியூரில் புன்னம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசு அனுமதியின்றி ஒன்றரை யூனிட் மணல் எடுத்து செல்வது தெரிய வந்தது. இதனிடையில், போலீசார் லாரியை சோதனை செய்து கொண்டிருக்கும் போது, லாரி டிரைவர் தப்பி ஓட முயன்றார். உடனே, போலீசார் டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரி டிரைவர் அதே பகுதியை சேர்ந்த சின்னசென்னாநாயக்கர் மகன் முருகேசன் (வயது 34) என்பது தெரியவந்தது.
மேலும், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் ஆற்று படுக்கையில் இருந்து அள்ளப்பட்டு கடத்தி வரப்பட்ட மணலை குவியலாக பதுக்கி வைத்து, கோபால் என்பவர் வணிக நோக்கத்தில் விற்பனை செய்ய மணல் ஏற்றி விட்ட லாரியை முருகேசன் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் முருகேசனை கைது செய்து, மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக மல்லியூரை சேர்ந்த லாரி உரிமையாளர் கோபால் என்பவரை தேடி வருகின்றனர்.