கோபி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோபி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பெருமுகை ஊராட்சி எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணதாஸ். இவர் கோவையில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி ஹேமப்பிரியா (வயது 44). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபி கரட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹேமப்பிரியா தவணை தொகையை திருப்பி செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால், நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கடந்த 2ம் தேதி அன்று ஹேமப்பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் தவணை தொகையை திருப்பி செலுத்துமாறு கேட்டுள்ளனர். அதற்கு, அவர் தவணை தொகையை செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளார். அதனை அவர்கள் மறுத்துள்ளனர்.
மேலும், நிதி நிறுவன ஊழியர்கள் ஹேமப்பிரியாவின் வீட்டின் சுவரில், 'இந்த வீடு அடமானத்தில் உள்ளது' என எழுதியுள்ளனர். இதில் மனம் உடைந்த ஹேமப்பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ஹேமப்பிரியாவை அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டியது நிதி நிறுவன ஊழியர்களான கோபி புதுப்பாளையம் கண்ணகி வீதி நாயக்கன்காட்டை சேர்ந்த சதீஷ் (40), பிச்சாண்டபாளையம் வாட்டர் டேங்க் வீதியை சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகன் மெய்கீர்த்தி (28), பொம்மநாயக்கன்பாளையம் தன்னு தெருவை சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகன் வெங்கடேஷ் (30), பாரியூர் நல்லாதான் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல் (32) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, அறிந்ததும் 4 பேரும் தலைமறைவானார்கள். அதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், 4 பேரும் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.