கோபி அருகே காரை மோதி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் மீது, காரை மோதி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.;
கோபி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் மீது, காரை மோதி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் மாரசாமி. இவருடைய மனைவி யுவராணி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாரசாமி மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் யுவராணி மகன், மகளுடன் கோபி கணக்கம்பாளையத்தில் சந்திரசேகர் (46) என்பவரின் வீட்டில் வாட கைக்கு இருந்து வந்தார்.
அப்போது, சந்திரசேகருக்கும், யுவராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் வேறு வீட்டுக்கு குடி பெயர்ந்து விட்டார். இந்தநிலையில், நேற்று காலை கணக்கம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு யுவராணி மகன், மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். பங்களாப்புதூர் அருகே உள்ள துறையம்பாளையம் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் காரில் வந்த சந்திரசேகர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த 3 பேரும் காயமடைந்தனர். மேலும் காரை விட்டு இறங்கிய சந்திரசேகர் யுவராணியை கல்லால் தாக்க வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்ததால் சந்திரசேகர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதுகுறித்து யுவராணி பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். யுவராணி மகன், மகளுடன் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.