பவானியில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம்
ஈரோடு மாவட்டம் பவானியில் அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.;
ஈரோடு மாவட்டம், பவானியில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தது. பொது போக்குவரத்திற்கு அனுமதி இல்லாததால் சாலைகள் எங்கும் வெறிச்சோடி காணப்பட்டது. மருத்துவ ஆம்புலன்ஸ்கள், போலீசாரின் வாகனங்கள் மட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
எனினும் திருமண நிகழ்ச்சிக்கு செல்வோர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் திருமண பத்திரிகைகள் உள்ளிட்டவைகளை சரிபார்த்த பின்பு பல்வேறு அறிவுரைகள் வழங்கி போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.
முக்கிய பகுதிகளான பவானி - மேட்டூர் சாலை , பவானி-ஈரோடு சாலை , பவானி - சத்தி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர்.