பங்களாப்புதூர்: போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்ற 2 பேர் கைது

பங்களாப்புதூர் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டை வைத்து வேட்டையாட முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-12 10:45 GMT

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டு.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  பங்களாப்புதூர் அண்ணாநகர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 27). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தன்னுடைய மாட்டை தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியையொட்டிய இடத்தில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். இதில் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் தான் மாட்டின் வாய் சிதைந்து படுகாயம் அடைந்தது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த மகேஷ்வரன், பங்களாப்புதூர் அருகே உள்ள எருமைக்குட்டையை சேர்ந்த நடராஜ்  ஆகியோர் தான் நாட்டு வெடிகுண்டை வனப்பகுதிக்குள் வைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் பிடிக்க பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் அண்ணாநகர் சென்றனர்.

இதனையடுத்து, போலீசாரை கண்டதும் மகேஷ்வரனும், நடராஜனும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்களது பையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை காண்பித்து அருகில் வந்தால் நாட்டு வெடிகுண்டை வீசி விடுவோம் எனக்கூறி மிரட்டினர். ஆனால் போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டை வைத்ததாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அதில் 38 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News