பெருந்துறை அருகே வீடு புகுந்து பணம், செல்போன், கைக்கடிகாரம் திருடிய 6 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வீடு புகுந்து பணம், செல்போன், கைக்கடிகாரம் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-19 06:20 GMT

பெருந்துறை அருகே வீடு புகுந்து பணம், செல்போன், கைக்கடிகாரம் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள முள்ளம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் ஈரோடு நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர் கடந்த 2ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் வீட்டின் மாடி கதவு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராஜேந்திரன் வீட்டிற்கு வந்து பார்த்தார்.

அப்போது வீட்டின் பீரோவின் அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.26 ஆயிரம், 3 கைக்கடிகாரங்கள், செல்போனை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து அவர் காஞ்சிக்கோவில் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.

விசாரணையில், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த செல்வா (24), சக்திவேல் (29), காஞ்சீபுரம் புஷ்பா நகரை சேர்ந்த ரமேஷ் (24), காவனூரை சேர்ந்த குமார் (24), திருவள்ளூர் பெத்தூரை சேர்ந்த சிரஞ்சீவி (37), 15 வயது சிறுவன் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இருந்த 6 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News