ஈரோட்டில் ரயிலில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது!
ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஆன்டோ (வயது 62). இவர் கடந்த மாதம் 23ம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சூர் இரிஞ்சலகுடாவுக்கு செல்வதற்காக எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். அந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்து நின்றது. அப்போது, ஆன்டோ தன்னிடம் இருந்த செல்போனை பார்த்தபோது காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஈரோடு ரயில் நிலையத்தின் கார்கள் நிறுத்துமிடத்தில் ரயில்வே போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈரோடு பவானி ரோடு கண்ணகி நகரை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகன் சக்தி வேல் (23) என்பதும், ரெயிலில் ஆன்டோவிடம் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் செல்போனையும் மீட்டனர்.