ஈரோட்டில் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைப்பு: தனியார் நிறுவன ஊழியர் கைது

ஈரோட்டில் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-01 11:20 GMT

உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தையும், கைது செய்யப்பட்ட முரளியையும் படத்தில் காணலாம்.

ஈரோட்டில் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின், காவலாளி நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்தார். அப்போது, ஏடிஎம் மையத்துக்குள் இருந்த ஏடிஎம் இயந்திரம் உடைந்து சேதமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், அவர் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்துக்கு விரைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து, ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த முரளி (வயது 35) என்பதும், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், இவர் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றதும், ஆனால், இயந்திரத்தில் இருந்து பணம் வராததால் அதை காலால் உதைத்து, கையால் அடித்து உடைத்தும் சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்தனர்.

Similar News