பெருந்துறையில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 7 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கதிரவன் மற்றும் போலீசார் பெருந்துறை - ஈரோடு சாலையில் உள்ள வாய்க்கால்மேடு அருகில் நேற்று (ஜன.5) அதிகாலை 3 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 7 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதனால் சந்தேக அடிப்படையில், அவர்களை துரத்திப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த பெருந்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், வங்கதேசம் சத்ரிகா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரபிகுல் இஸ்லாம் என்கிற பிக் முல்லா (வயது 31), மொக்லெச்சூர் ரஹ்மான் லால்து (எ) லால்டு முல்லா (வயது 23), முகமது சைதுல் இஸ்லாம் (வயது 48), முகமது மொனிருல் இஸ்லாம் (வயது 23), முகமது அனருல் இஸ்லாம் (எ) அனருல் (வயது 31), முகமது ரஜிபுல் இஸ்லாம் (வயது 37), முகமது மாசூர் (வயது 22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் கடந்த 12-லிருந்து 15 ஆண்டுகளாக வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பெருந்துறை அருகே உள்ள பனிக்கம்பாளையம் குப்பக்காடு பகுதியில் தங்கி வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் 15-லிருந்து 17 ஆண்டுகளாக வசித்து கொண்டு வெல்டிங், கட்டிட வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.