சென்னிமலை அருகே வீடு புகுந்து வனச்சரக அலுவலரின் தாயிடம் மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகை பறிப்பு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வீடு புகுந்து வனச்சரக அலுவலரின் தாயிடம் மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
பைல் படம்.
சென்னிமலை அருகே வீடு புகுந்து வனச்சரக அலுவலரின் தாயிடம் மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள 1010 நெசவாளர் காலனி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு சந்தனமர கிடங்கில் வனச்சரக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் ஜெயமணி (வயது 75). இவர் 1010 நெசவாளர் காலனியில் உள்ள வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மதியம் ஜெயமணி வீட்டை திறந்து வைத்தபடி படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் ஜெயமணி முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.