சத்தியமங்கலம்: தாளவாடி அருகே பாட்டி, பேரன் படுகொலை; போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பாட்டி, பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-04-14 04:40 GMT

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பாட்டி, பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பா. இவருடைய மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் ராகவன் (வயது 11). சூசைபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

தொட்டம்மாவின் சித்தி சிக்கம்மா (55). இவருடைய வீடு அதே பகுதியில் சில வீடுகள் தாண்டி உள்ளது. சிறுவன் ராகவனுக்கு சிக்கம்மா பாட்டி முறை ஆவார். இதனால், அடிக்கடி பாட்டி வீட்டுக்கு சிறுவன் சென்று வருவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சிக்கம்மா வீட்டுக்கு சிறுவன் சென்று உள்ளான். பின்னர் அங்கு சிக்கம்மாவும், ராகவனும் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

இந்த நிலையில், நேற்று காலை சிக்கம்மா முகம் சிதைந்த நிலையிலும், ராகவன் ரத்த வெள்ளத்திலும் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோவை மண்டல டிஐஜி சசிமோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் முத்தரசு, தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிக்கம்மா மற்றும் ராகவனின் உடல்களை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிக்கம்மா மற்றும் ராகவனை தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. மேலும், ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேககைளை பதிவு செய்தனர்.

இதேபோல், ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் காவிரி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய், சம்பவ நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி தொட்டகாஜனூர் பேருந்து நிறுத்தம் வரை சென்றது. அங்கேயே சிறிது நேரம் நின்று விட்டு பின்னர் மீண்டும் சம்பவம் நடந்த வீட்டுக்கே வந்துவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிக்கம்மா வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க வந்தபோது இந்த கொலை நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர். இந்த படுகொலை சம்பவம் தாளவாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News