கோபி அருகே 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-01-19 11:15 GMT

அட்சயா.

கோபி அருகே 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 36). எலக்ட்ரீசியன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 30). இவர்களுக்கு காவியா (வயது 13), அட்சயா (வயது 10) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

காவியா அந்தியூர் அருகே ஆலாம்பாளையத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி 8ம் வகுப்பு படித்து வருகிறார். அட்சயா பெற்றோருடன் தங்கி கோபியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அட்சயா மனவேதனை அடைந்து வந்ததாக தெரிகிறது. நேற்று மஞ்சுளா வேலைக்கு சென்ற பின்பு வீட்டில் இருந்த அட்சயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், வேலை முடிந்து வீடு திரும்பிய மஞ்சுளா மகளை காணாமல் தேடவே, வீட்டின் உள் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து ஜன்னலை திறந்து பார்த்த போது தான் மகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் வீட்டின் மேல் ஏறி கூரையை பிரித்து உள்ளே இறங்கி அட்சயாவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News