ஈரோடு: சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை; வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினரை கணக்கெடுக்கும் போலீசார்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.;

Update: 2025-05-03 13:30 GMT

சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளாங்காட்டுவலசு, மேகரையான் தோட்டத்தில்  தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, சிவகிரி போலீசார் நடத்தியம முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட எஸ்பி சுஜாதா நேரில் விசாரணை நடத்தியதுடன், கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை போலீசாரை நியமித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கொலை நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் எஸ்பி சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இச்சம்பவத்தை தொடர்ந்து பெருந்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனியாக வசிக்கும் வயதானவர்களை கணக்கெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டார பகுதியில் உள்ள 100 சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News