ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து 12 பவுன் நகை கொள்ளை!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்;
சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விலாங்காட்டுவலசு, மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன் கவிசங்கர் முத்தூரில் மோட்டார் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
மகள் பானுமதிக்கு திருமணம் ஆகி கணவருடன் முத்தூர் அருகே சர்க்கரை பாளையத்தில் வசித்து வருகிறார். ராமசாமி தனது மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் ராமசாமி தனது மகன், மகளுடன் போனில் பேசி வந்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கவிசங்கர் பெற்றோருக்கு போன் செய்துள்ளார், ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து மேகரையான் தோட்டத்து பகுதியில் வசித்து வரும் தங்களது உறவினர்களை செல்போனில் அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார்.
இதனையடுத்து கவிசங்கரின் உறவினரான நதியா மற்றும் நல்லசிவம் ஆகியோர் ராமசாமி வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவரது வீட்டின் முன் பகுதியில் ராமசாமியும், வீட்டுக்குள்ளே பாக்கியமும் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.ஜி செந்தில் குமார், டி.ஐ.ஜி சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாக்கியம் அணிந்திருந்த 7 பவுன் தாலிகொடி, 5 பவுன் வலையல், மோதிரம் என 12 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது.
ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த வீடு தனியாக உள்ள தோட்டத்து வீடாகும். இதன் அருகே வீடுகள் இல்லை. சற்று தொலைவில் வீடுகள் இருந்துள்ளன.
இதனை சாதகமாக்கி கொண்ட மர்ம கும்பல் தங்களது திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் ராமசாமி வீட்டில் ரத்தக்கரை படிந்திருந்தது. நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.