ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 7ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் 1,089 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.;
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் 6 கட்ட தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை)நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் 7ம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மாவட்டம் முழுவதும் நாளை 538 மையங்களிலும், நாளை மறுநாள் 551 மையங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 1,089 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுபோல் மாநகர் பகுதியில் 60 வார்டுகளில் தல 60 மையங்கள் 4 சிறப்பு மையங்கள், இது தவிர 40 நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை, நாளை மறுதினம் நடக்கிறது. இம்முகாமில் 1 லட்சத்து, 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்தலாம்.
ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், கோவிஷீல்டு தடுப்பூசியாக இருந்தால் 84 நாட்கள் நிறைவடைந்த பிறகும், கோவேக்சின் தடுப்பூசியாக இருந்தால் 28 நாட்கள் நிறைவடைந்த பிறகு, 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.