திங்களூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை திடீரென உடைப்பு
தாசம்புதூர் பகுதியில் உள்ள எல்பிபி வாய்க்காலின் கிளை வாய்க்கால் அருகே ஏற்பட்ட நீர்கசிவு உடனடியாக சரி செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பவானிசாகர் அணையிலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பயன்பெறும் வகையில், எல்பிபி பிரதான வாய்க்கால் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாய்க்காலின் 43.7 ஆவது மைல் உள்ள நல்லாம்பட்டி, தாசம் புதூர் என்ற பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் அருகே நேற்று முன்தினம் லேசான நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தண்ணீர் கசிவு உள்ள இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பவானிசாகர் அணைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக இந்த வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. நேற்று சம்பவ இடத்தில் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர். லேசான கசிவு என்பதால் அந்த பகுதியில் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் அதற்கான பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே வாய்க்காலின் 52வது மைல் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.